தேசத்தின் சார்பில் மனந்திரும்பவதற்கான அறிக்கை.

தேவன் அன்பாகவே இருக்கிறார். அவர் இரக்கமுள்ளவராகவும் பொறுமையுள்ளவராகவும் இருக்கிறார். அதே வேளையில் அவர் நீதியுள்ளவரும், ஒடுக்கப்படுவதனாலும், அநீதியினாலும் நசுக்கபடுகிறவர்களின் கூக்குரலைக் கேட்பவராகவும் இருக்கிறார். தேவனுடைய பொறுமையை, அலட்சியம் செய்யும் தேசங்கள், தாம் செய்த தவறுகளுக்காகத் தேவனுடைய நியாயத்தீர்ப்புக்கு ஆளாவதனை, சரித்திரம் தெரிவிக்கின்றது. ஜனங்கள் தங்களுடைய தவறான செய்கைகளை ஒப்புக்கொண்டு, அவற்றை விட்டுவிடும் போது, தேவன் தலையிட்டு தமது இரக்கத்தைத் திரும்பவும் காண்பிக்கின்றார். இதுவே மனந்திரும்புதல் என்று அழைக்கப்படுகின்றது. இதனை வேதாகமத்தில் காண்கிறோம். அதேபோல, இலங்கை தேசத்தைச் சேர்ந்த தேவ ஜனங்களாகிய நாமும். எமது தேசத்தின் சார்பில் இந்த மனந்திரும்புதலின் செயலில் ஈடுபடுவோமாக:

குற்றமற்ற இரத்தம் சிந்தத் தீவிரமாக செயற்பட்டதற்காக, எமது தேசத்தின் சார்பில் மனந்திரும்புகின்றோம். மனித ஜீவனின் புனிதத் தன்மையை நாம் இழிவுபடுத்திவிட்டோம். எமது இன துவேசத்தினால், விதவைகளாக்கப்படுபவர்கள், அநாதைகளாக்கப்படுபவர்கள், அங்கவீனர்களாக்கப்படுபவர்கள் மற்றும் தமது பிள்ளைகளை இழந்தமையால், முதிர்வயதில் தம்மைப் பராமரிக்க எவரும் இல்லாத பெற்றோர் போன்றவர்களின் வேதனையையும், கண்ணீரையும் எண்ணாமல் போய்விட்டோம். எமது தேசத்தின் சகல பகுதிகளிலும் சிந்தப்பட்ட ஏராளமானோரின் இரத்தம் கதறிக்கொண்டிருக்கின்றது, என்பதனைப் புரிந்து கொண்டவர்களாக, எமது இருதயங்கள் உடைந்து, தேவனுடைய இரக்கதிற்காகவும், மன்னிப்புக்காகவும் அவரை நோக்கிக் கதறுவோமாக இதனால் சர்வவல்லவர், எம்மை மன்னித்து, எமது தேசத்தைக் குணமாக்குவராக.

நவீன கால அடிமைத்தனத்தால் நாம் பயன் பெற்றதற்காக எமது தேசத்தின் சார்பிலே நாம் மனந்திரும்புகிறோம். எமது தாய்மாரும் மகள்மாரும், தாம் சம்பாதிக்கின்ற டொலர்கள் மூலமாக, எமது அந்நியச் செலவாணி சிறந்த நிலையினை அடையும் என்பதற்காக, அவர்கள் வெளிநாடுகளில் வேலைசெய்ய ஊக்குவித்திருக்கிறோம். அவர்கள் வெளிநாடுகளில் அநேக ஆபத்துக்களுக்கு முகம் கொடுக்கவும் சிலர் அங்கு மரித்து சடலங்களாக அனுப்பப்படவும் நேரிடும் என்று அறிந்தும் அப்படிச் செய்திருக்கிறோம். தம்மைப் பாதுகாக்க, மகள்மாருக்குத் தாய்மார் இல்லாமலும் வழிநடத்த, மகன்மாருக்குத் தந்தைமார் இல்லாமலும் இல்லங்களில் தீங்குகள் ஏற்படக்கூடிய நிலமைகளுக்கு எமது கண்கள் குருடாயிருந்திருக்கின்றது. எமது பேராசையினால் ஏற்பட்ட குருட்டாடத்தை மன்னிக்கும் படி சர்வவல்லவரிடம் மன்னிப்புக் கேட்கிறோம். நேர்த்தியான வழிகளில், எமது பொருளாதார முன்னேற்றத்திற்கான வழிகள் ஏற்பட எமது மனதைத் திறக்கும்படி தேவனிடம் கேட்கிறோம். காணமல் ஆக்கப்பட்ட கணக்கிட முடியாத அநேகருக்காக எமது தேசத்தின் சார்பில் மனந்திரும்புகிறோம். இதனால் விட்டுச் செல்லப்பட்டவர்கள் விரக்தியடைந்திருக்கிறார்கள். அவர்களது இழப்பினை அரசாங்கம் ஏற்றுக்கொள்வில்லை. மழையிலும் வெய்யிலும் அவர்கள் வீதிகளிலும் பொது இடங்களிலும் நின்று ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். தமது குரல் கேட்கப்படும்படி அங்குமிங்கும் அலைந்து கொண்டிருக்கிறார்கள். அதன் மத்தியில் நமது செழிப்பான எதிர்காலத்தைத் தேடிக்கொண்டிருக்கின்றோம். கொலைகள் செய்தவர்களுக்கு பதவி உயர்வுகளைக் கொடுத்திருக்கிறோம். பதில் தேடிக்கொண்டிருப்பவர்களின் வேதனையை அதிகரிக்கச் செய்திருக்கிறோம். எமது ஆறுகளில் அடித்துச் செல்லப்படுகின்ற சடலங்களைக் காணும் போதும், அடையாளம் காணபட முடியாத பிரேதக் குழிகளில் புதைக்கப்பட்டிருப்பதை அறியும் போதும் அழுது புலம்புகிறோம. ‘இனி இப்படி ஒரு போதும் இருக்கப் போவதில்லை’ என்று சொல்லக்கூடிய நல்ல குணவியல்பைத் தந்து நம்மைப் பெலப்படுத்தும் படி சர்வ வல்;லவரிடம் கேட்போமாக.

நீதியைப் புரட்டியமைக்கவும், அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்வதற்காகவும், இழைக்கப்பட்ட கொடிய வழிமுறைகளால், ஏழைகளை சுரண்டியமைக்ககாகவும் நாம் தேசத்தின் சார்பில் மனந்திரும்புகிறோம். உண்மையைப் பொய்யாக்கி, பொய்யை உண்மையாக முன்னெடுத்து, பகிரங்கமாக முன்வைத்து அதற்காக நீதி மன்றங்களைப் பாவித்த குற்றத்திற்காக மனந்திரும்புகின்றோம். இந்த அழகிய தீவின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும், உண்மை நிலை விசாரிக்கப்படாது, எமது தலைவர்கள் மோசமான பொய்களை சர்வசாதாரணமாகப் பேசியதால், ஏற்பட்ட சாபமான நிலைமைகளுக்காக நாம் மனந்திரும்புகிறோம். எமது தேசத்தின் பிரஜைகள் இன்னும் பகுத்தறிகிறவர்களாக மாறவும், உயர்மட்டங்களில் பொய்யைப் பரப்புகிறவர்களின் வாய்கள் அடைக்கப்படவும் சர்வ வல்லவரிடம் கேட்கிறோம்.

இனங்களுக்கிடையே பிரிவினைகளைத் தூண்டி, சகோதரனை ‘அந்தியர்களாக’ காண்பது, சகோதரனுக்கு விரோதமாகச் சகோதரன் எழத்தக்க சூழ்நிலைகளை ஊக்குவித்தமைக்காகவும் மனந்திரும்புகின்றோம். திறமைசாலிகளை அடக்கிவைத்து தேசத்தின் தீயோரை செழிப்புறச்செய்து, தேசத்தைப் பாழாக்கியதற்காக மனந்திரும்புகிறோம். பலதரப்பட்ட தன்மையின் செழிப்பினை அவமாக்கி, ஒரின உணர்வை ஊக்குவித்து அதனால் நாம் ஏழைகளாகவும் சட்டத்தை மீறினவர்களாகவும் மாறியிருப்பதற்காக மனந்திரும்புகிறோம்.

தேசத்தின் பாரம்பரிய உயர் மட்டத்தவர்களாகத் தம்மைக் கருதி பொதுசனத்தின் பாடுகளுக்காக அனுதாப்படாதவர்களாகவும், பொதுசனத்தை ஒடுக்குதலினால் தம்மை உயர்மட்டத்தவர்களாக்கிக் கொண்டவர்களுக்காகவும் நாம் மனந்திரும்புகின்றோம். அன்றாட அத்தியவசிய தேவைகள் கிடைக்கப்பெறாமல் கோபமாகவும் பசியாகவும் பலர் இருக்கும் அதே வேளையில், அவர்களை ஒடுக்கி, தமது தேவைக்கும் அதிகமாக சந்ததிகளுக்காக பணத்தை அபகரித்து வைத்திருப்பவர்களுக்காக மனம் உடைந்து போயிருக்கிறோம். உபசரிப்பும் அக்கறையும் உள்ள தேசத்தவர் என்கிற எமது அடையாளத்தை இலஞ்சமும், ஊழலும் நிறைந்த தேசத்தவர் என்று மாற்றிக்கொண்டமைக்காக நாம் மனந்திரும்புகின்றோம். எமது ஆத்துமாக்களுக்கும் எமது அன்பான இலங்கை தேசத்தின் ஆத்துமாவுக்கும் ஏற்பட்டுள்ள சேதத்தைத் திருத்தித் தரும் படி சர்வவல்லவரிடம் கேட்கின்றோம்.

சமூகத்தின் எல்லா மட்டங்களிலும் கணக்கு ஒப்புவித்தல் குறைவடைந்திருப்பதற்காக மனஸ்தாபப்படுகிறோம். இதனால் ஏற்றத் தாழ்வுகள் ஏற்பட்டிருப்பதோடு, அதிகாரமுள்ளவர்கள் மக்களின் தேவைகளுக்கு உணர்வற்றிருக்கும் நிலமை ஏற்பட்டிருப்பதற்காகவும் மனந்திரும்புகிறோம். இளையோரும், முதியர்வகளும் இன்று காணப்படுகின்ற குற்றமிழைத்தவர்கள் தப்பிப்போகும் நிலைமைகளால் உடைந்துபோயும் எதிர்பார்ப்புக்களை இழந்து போயும் காணப்படுகிறார்கள். எமது பெருமைக்காகவும் அகந்தைக்காகவும் மனந்திரும்புகிறோம்.

நாம் மனந்திரும்பிய பின்னர், எமது வழிகள் மாற்றமடையும் போது நாம் சர்வ வல்லவரிடம் இந்த சிறப்பான தேசத்தை ஆசீர்வதிக்கும்படி கேட்போம். கர்த்தாவே, இந்த தாழ்மையுள்ள மக்களை ஆசீர்வதியுங்கள், எமது வயல்கள் அதிகளவான அறுவடையைக் கொடுப்பதாக. எமது கடல் வளங்கள் திரும்பவும் எம்மைப் போஷிப்பதாக. எமது கைகளின் பிரயாசமும், எமது மூளையின் ஆற்றலும் திரும்பவும் அதிகரித்துக் காணப்படுவதாக. உலகிலேயுள்ள களைத்துப் போயிருப்பவர்கள், உல்லாசப் பயணிகளாக எமது தேசத்திற்குத் திரும்பவும் வந்து எமது நாட்டின் இயற்கை வனப்புக்களையும், மக்களையும் அவர்களது கலாச்சாரத்தையும் அனுபவிப்பார்களாக. எமது கதறுதலுக்கு செவிகொடுக்கும் படி சர்வ வல்லவரைப் பிராத்திக்கிறோம்.

இந்த மனந்திரும்புதலின் செய்கையோடு இணைந்து கொள்ளும்படி யாவரையும் அழைக்கின்றோம்.

நிறைவேற்றுக்குழுவுடன்
வண. கலாநிதி. எரல் கிறிஸோகுமார் ஹென்டி (தலைவர்)
அசெம்பிளீஸ் ஒப் கோட் – இலங்கை