அமைதியான போராட்டத்திற்கு இடையூறு

இலங்கை தேவ சபைகள் சங்கம் (அசெம்பிளீஸ் ஒப் கோட் ஒப் சிலோன்) கடந்த 2022 மே 9ம் திகதி கொழும்பில் ஆட்சியாளர்களால் அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்களின் மீது வெளிப்படையாக நடப்பித்த செயலைப் பற்றி எமது ஆழ்ந்த ஏமாற்றத்தையும் பலமான ஆட்சேபனையையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

கொழும்பில் நடைபெற்று வந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டமானது ஒரு மாதகாலமாக, மக்கள் அனுபவித்துவரும் வாழ்க்கை கஷ்டங்களை மிகவும் சிறந்த முறையில் உலகுக்கு தெரிவித்துக் கொண்டிருந்தது. ஆனால் பிரதம மந்திரியின் வாசஸ்தலத்திலிருந்து வெளியேவந்த வன்முறைக் கும்பலானது அமைதியான வழியில் ஆர்ப்பாட்டம் செய்தவர்களைத் தாக்கி அவர்களது உபகரணங்களையும் கட்டமைப்பினையும் அழித்துப் போட்டது. காயமடைந்த யாவரையும் நாம் ஜெபத்தில் தாங்குவதோடு, நித்தியமானவராகிய தேவனிடம் அவர்களுக்குச் சிகிச்சையளிக்கும் வைத்தியர்களுக்கு ஞானத்தைக் கொடுக்கும் படி வேண்டுகின்றோம். இதன் விளைவாக ஏற்பட்ட மரணங்களுக்காக மிகுந்த துக்கமடைந்துள்ளோம். தமது அன்பான உறவுகளின் இழப்பால் துயரத்தில் இருப்பவர்களின் ஆறுதலுக்காக ஜெபிக்கின்றோம்.

எமது தேசத்தின் வாலிபர்களால் வழிநடாத்தப்படும் மக்களுக்கான போராட்டத்திற்கு, நாமும் எமது ஆதரவினைத் தெரிவித்துக்கொள்கின்றோம். இவர்கள் இனவாதம், குடும்ப ஆட்சி, ஊழல் அற்ற ஒரு தேசத்தில் யாவரும் சமத்துவம், கணக்கு ஒப்புவித்தல், திறமையான வழிமுறைகள் மற்றும் ஒருவரையொருவர் மதிக்கும் மனப்பாங்குடன் வாழும் தேசமாக எமது தேசம் மாற்றமடைய யாவரையும் அழைக்கின்றார்கள். இன்றைய அரசியல் தலைமைத்துவமானது 2019 ஜனாதிபதி தேர்தல் மூலமாகவும் இன்றைய பாராளமன்றமானது 2020 தேர்தலில் தெரிவுசெய்யப்பட்டதொன்றாகும். இருப்பினும் மக்கள் தமக்கு வழங்கிய ஆணையை இன்றைய அரசு இழந்து விட்டமையால் மாற்றம் ஏற்படவேண்டும் என்கிற புரிந்துணர்வை நாம் ஆமோதிக்கின்றோம். தேசத்தின் வளங்களைச் சூறையாடியதாக சந்தேகிக்கிப்பட்டுள்ளவர்கள், பொருத்தமான சட்ட வழிமுறைக்கு உள்ளாக்கப்பட்டு, குற்றவாளிகளாகக் காணப்படுவார்களாயின், அவர்களிடமிருந்து அவைகள் மீளப்பெறப்பட வேண்டும் எனும் அறைகூவலை நாமும் ஆதரிக்கின்றோம்.

இலங்கை அரசியல் யாப்பின் 20வது திருத்தம் இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்பதன் முக்கியத்துவத்தை நாம் தெளிவாக புரிந்துகொண்டுள்ளோம். அத்துடன் 19வது திருத்தம் பலப்படுத்தப்படுவதோடு, முன்மொழியப்பட்டுள்ள 21 வது திருத்தத்தில் உள்ளடங்கியவை அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதை நாமும் ஆதரிக்கின்றோம்.

காவல் துறையினரும் முப்படையினரும் இன்று அதிகளவு அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர். இருப்பினும் பாதுகாப்புத்தரப்பினர் நீதியுடனும், ஆகக்கூடிய பொறுமையுடனும் கட்டுப்பாட்டுடனும் தமது கடமையை செயற்படுத்தும்படி கேட்டுக்கொள்கிறோம். அநீதிகளுக்கு வன்முறை மூலம் பதிலளித்துள்ளவர்கள், விரக்தியினாலும் நியாயப்படுத்தக்கூடிய கோபத்தினாலும் அவ்வாறு செயற்பட்டிருந்தாலும், அவர்களை வன்முறையற்ற வழிமுறைகளைக் கடைப்பிடித்து அமைதியான போராட்டத்தை முன்னெடுக்கும்படி கேட்டுக்கொள்கின்றோம்.

இறுதியாக எமது சக இலங்கை வாழ் மக்களை தேசத்தைக் கட்டியெழுப்புவதில், இணைந்து கொள்ளுமாறு ஊக்குவிக்கின்றோம். எமது கிறிஸ்தவ நம்பிக்கையின்படி மரணத்தின் பின்னர் உயிர்த்தெழுதல் உண்டு. அவ்வாறே இப்போதுள்ள குழப்பமான நிலையிலிருந்து, தேவன் இலங்கை தேசத்தை மீட்டெடுத்து, எமது எதிர்கால சந்ததிகள், ஜக்கியத்துடனும், மரியாதையுடனும், கௌரவத்துடனும், தேவனுடைய ஆசீர்வாதங்களுடனும் வாழும் ஒரு சிறந்த காலத்தை எமக்குத் தந்தருளுவார் என்கிற நிச்சம் எமக்குண்டு. உங்களுக்கு சிறந்த எதிர்காலம் உண்டாவதாக.

நிறைவேற்றுக்குழுவுடன்
வண. கலாநிதி. எரல் கிறிஸோகுமார் ஹென்டி (தலைவர்)
அசெம்பிளீஸ் ஒப் கோட் – இலங்கை